இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் அதிமுகவின் தோளேறி பின்வாசல் வழியாக ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கத் துடிக்கும் பாஜகவை முதன்மை எதிரியாகக் கட்டமைத்து, அதனையொட்டிய பரப்புரைகளை முன்வைத்து, ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது திமுக.
வீரியமாய்ச் செய்திட்ட அரசியலென்ன?
இன்றைக்கு அதே திமுக, பாஜக இட்ட பாதையில் செல்வதும், அவர்களை மென்மையானப்போக்கோடு அணுகுவதும் பெருத்த ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது.
இந்திய அரசியலமைப்புச்சாசனத்தில் கூறப்பட்ட ‘ஒன்றியம்’ எனும் சொல்லைப் பயன்படுத்தியதைத் தாண்டி திமுக அரசு, பாஜகவை எதிர்த்து வீரியமாய்ச் செய்திட்ட அரசியலென்ன?.
பாஜகவின் தாய்க்கழகமான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கிளையான சேவா பாரதியானது சேவை அரசியல் எனும் பெயரில் மக்களிடையே ஊடுருவி, இந்துத்துவ வேர்ப்பரப்பலையும், பிரித்தாளும் அரசியலையும் செய்து வருவது நாடறிந்தது.
திமுக அரசிலும் அதே நிலைதான்...
இந்நிலையில் தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற கரோனாவுக்கு எதிரான தன்னார்வ இயக்கங்களின் கலந்தாய்வுக்கூட்டத்தில் சேவா பாரதியை அழைத்தது ஏன்? அதன் பின்புலத்திலுள்ள அரசியலென்ன?
சாலை வசதி, தெருவிளக்கு வசதி போன்றவை மக்களின் அத்தியாவசிய அடிப்படைத்தேவைகள். அதனைச் செய்வதற்குத்தான் வரிப் பிடித்தம் செய்யப்படுகிறது; அரசாங்கம் எனும் கட்டமைப்பு இயங்குகிறது.
அதனைச் சரிவர மக்களுக்குச் செய்து தருவதுதான் மக்களாட்சி; மக்களுக்கான ஆட்சி. அடிப்படை உள்கட்டமைப்புகளுள் ஒன்றான சாலையைச் செப்பனிட்டு, சீரமைத்து, தெருவிளக்குக்கம்பங்களை உரிய முறையில் பராமரித்திட கடந்த அதிமுக அரசுதான் முன்வரவில்லையென்றால், தற்போது வந்திருக்கிற திமுக அரசிலும் அதே நிலைதான் தொடர்கிறது.
ஒப்புக்கு கடிதம் எழுதி அனுப்பிவிட்டால் போதுமா?
மோகன் பகவத்தின் வருகை இல்லையென்றால், சாலைப்பராமரிப்பு செய்யப்பட்டிருக்காது; அதே குண்டு குழியுமான சாலையும், எரியாத தெருவிளக்குக்கம்பங்களும்தான் இருக்குமென்றால் அதென்ன ஜனநாயகம்?
அறிஞர் அண்ணாவின் வழியில் நடத்துவதாகக் கூறும் திமுக, அண்ணாவின் உயிலென வர்ணிக்கப்படக்கூடிய மாநிலத்தன்னாட்சியை நிலைநாட்டத் தயங்குவது ஏன்?
எழுவர் விடுதலையில் ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்தோ அல்லது 161வது சட்டப்பிரிவின்படி மீண்டும் தீர்மானம் இயற்றியோ எழுவர் விடுதலையைச் சாத்தியப்படுத்த வேண்டிய திமுக, தனக்கு அதிகாரமில்லை எனும் ஆளுநரின் உண்மைக்குப் புறம்பான கூற்றை ஏற்பது போல, ஒப்புக்கு குடியரசுத்தலைவருக்குக் கடிதமெழுதி அனுப்பிவிட்டால் போதுமா?
திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்னானது?
முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வுக்கெதிராகத் தீர்மானம் இயற்றி, குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப்பெற்று தமிழ்நாட்டிற்கான விலக்கைச் சாத்தியப்படுத்துவோம் எனக்கூறிய திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்னானது?
கூடங்குளம் அணு உலைக்கெதிராகப் போராடியவர்கள் மீதான வழக்கைத் திரும்பப் பெற்ற திமுக அரசு, கூடங்குளம் அணு உலை விரிவாக்கத்திற்கு அதிமுக அரசு கொடுத்த அனுமதியைத் திரும்பப் பெறவில்லையே அது ஏன்? என்ன காரணம்?
தற்போது நியூட்ரினோ ஆலைக்கு இடப்பட்ட தடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. திமுக அரசு அதுகுறித்து வாய்திறக்கவில்லையே?
புகார் மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?
பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் சென்னை மாநகரையே அழித்துவிடும் என எச்சரிக்கிறோம். அதுகுறித்து திமுக எவ்வித அக்கறையும் காட்டவில்லையே? இதுதான் ஐயா ஸ்டாலின் அவர்கள் கூறிய விடியலா?
தன்னைப் பற்றி அவதூறு பரப்பிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவே காவல்துறையினரிடம் புகாரளித்தும், அது இரு சமூகங்களிடையே பிளவை உண்டாக்க முனைகிறது என எச்சரித்தும், புகார் மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? முதல் தகவல் அறிக்கையே பதிவுசெய்யாதது ஏன்?
எச்.ராஜாவை ‘வெறிநாய்’ என்று காட்டமாக விமர்சித்துவிட்டதாலேயே வேலை முடிந்துவிட்டதென எண்ணிவிட்டதா திமுக அரசு? வழக்கும், கைதும் தேவையில்லையா?
மம்தா பானர்ஜியைப் போல...
ஆகவே, இனிமேலாவது ‘ஒன்றியம்’ எனும் வார்த்தையைக்கூறியே, ஒப்பேற்றிவிடலாம் என எண்ணாமல், மேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜியைப் போல உளமார, ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கொடுங்கோன்மையை எதிர்க்க முன்வர வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாளை ஓபிஎஸ் - இபிஎஸ் பிரதமருடன் அவசர சந்திப்பு