சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் சி.எஸ்.கே. புரொடக்ஷன் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு விசித்திரன் என்ற தலைப்பை, தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர்கள் கில்டில் பதிவு செய்து, கடந்த மார்ச் மாதம் வரை புதுப்பித்தும் வந்துள்ளார்.
இந்நிலையில், விசித்திரன் என்ற அதே தலைப்பை பயன்படுத்தி ’பி ஸ்டுடியோ’ என்ற நிறுவனத்தின் மூலம் இயக்குநர் பாலாவும், இணைத் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷும் இணைந்து திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர். ஆர்.கே.சுரேஷ் அதில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தான் பதிவு செய்து வைத்துள்ள விசித்திரன் தலைப்பில் படத்தை தயாரிக்க தடை விதிக்கக் கோரி, சதீஷ்குமார் சென்னை 14 ஆவது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, இது குறித்து பி ஸ்டுடியோ நிறுவன உரிமையாளரான இயக்குநர் பாலா மற்றும் இணை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஜனவரி 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
இதையும் படிங்க: அண்ணாத்த படம் தாமதம்: சூர்யா பக்கம் திரும்பிய சிறுத்தை சிவா!