திருச்சி, வேலூர் தினமலர் நாளிதழின் பதிப்பாளரான ஆர்.ஆர்.கோபால்ஜி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், 'கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, கடந்த 60 நாள்களாக கோயில்கள் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதும், கோயில்கள் திறக்க ஜூன் 30ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோயில்கள் மூடப்பட்டுள்ளதால், கோயிலைச் சார்ந்த அர்ச்சகர்கள், வேத பாராயணர்கள், ஓதுவார்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறையின் உபரி நிதியில் இருந்து, 10 ஆயிரத்து 448 அர்ச்சகர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்குவதாக கடந்த ஏப்ரல் மாதம் மாநில அரசு அரசாணை பிறப்பித்தது.
இந்து சமய அறநிலையத் துறையில் 300 கோடி ரூபாய் உபரி நிதி உள்ளதால், அதனை அர்ச்சகர்கள், ஓதுவார்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் மாதம் 15 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை மனு அளித்தும் எந்தப் பதிலும் இல்லை.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ், 44 ஆயிரத்து 121 கோயில்கள் உள்ள நிலையில் 10 ஆயிரத்து 448 அர்ச்சகர்களுக்கு மட்டும் நிதி உதவி வழங்கப்படும் என்ற அரசாணை தவறானது. அனைத்து அர்ச்சகர்கள், ஓதுவார்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு உதவித் தொகை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
கோயில்கள் மூடியுள்ள நேரத்தில் பணிபுரியாவிட்டாலும் முழு சம்பளத்தை அறநிலையத்துறை அலுவலர்கள் பெறும்நிலையில், கோயில் நடைமுறைகள் மூலம் தினசரி வருமானம் ஈட்டுபவர்களின் நலனை அரசு கருத்தில் கொள்ளவில்லை" என மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.