சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரிப்பதன் காரணமாக, அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தலைமை செயலகப் பணியாளர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து தலைமை செயலக கட்டடம் முழுவதும் இன்று, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.
அண்மையில் அரசு வெளியிட்ட அறிக்கையில், மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு சுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள அரசு உயர் அலுவலர்கள் அறைகள், செயலாளர்கள் அறைகள் மற்றும் பல்வேறு துறை அலுவலக வளாகத்திலும் மாநகராட்சி பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனர்.
மேலும், கழிவறைகள், மின் தூக்கி ஆகிய இடங்களும் சுத்தம் செய்யப்பட்டன. இப்பணிகள் நடைபெற்றபோது காவல் துறையினரும் உடனிருந்தனர். இன்றும், நாளையும் கிருமி நாசினி கொண்டு தலைமைச் செயலகம் சுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இயக்குநர் ஷங்கர் பட ஸ்டண்ட் கலைஞர் தற்கொலை முயற்சி!