தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் ஒன்பது இடங்களில் தளர்வுகள் நீக்கம் செய்யப்பட்டு கடைகள் மூடப்பட்டுள்ளன.
சென்னை தியாகராயநகர், பாரிமுனை, புரசைவாக்கம், பனகல் பார்க் உள்ளிட்ட கடைவீதிகளில் கரோனா பரவல் காரணமாக கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி எச்சரிக்கை
இதனால் சென்னை தியாகராய நகரிலுள்ள 100-க்கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகள் மூடப்பட்ட நிலையில், ரங்கநாதன் தெரு வெறிச்சோடி காணப்பட்டது.
இந்நிலையில் தடையை மீறி கடையைத் திறந்த சரவணா செல்வரத்தினம் ஜவுளிக்கடைக்கு மாநகராட்சி அலுவலர்கள் சீல்வைக்க வந்தநிலையில் கடையின் ஊழியர்கள், 'நாங்களே கடையை அடைக்கிறோம்' எனக் கூறியதால், சீல் வைக்காமல் எச்சரிக்கை விடுத்து சென்றனர்.
அதனைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலர்கள், காவல் துறையினர் ரங்கநாதன் தெரு உஸ்மான் சாலை உள்ளிட்டப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஊழியர்கள் கூறியபோது..
இந்நிலையில் மாநகராட்சி அலுவலர்களிடம் ரங்கநாதன் தெருவில் கடை ஊழியர்கள் கூறியபோது, "கடைகள் திறக்க அனுமதியளித்தால், அனைவருக்கும் கடைகள் திறக்க அனுமதியளிக்க வேண்டும்.
ரங்கநாதன் தெருவில் மட்டும் மூடச் சொல்லிவிட்டு மற்ற பகுதியில் கடைகளைத் திறக்க அனுமதியளித்திருக்கின்றனர்" எனக் குற்றம்சாட்டினர்.
இதேபோல் ரங்கநாதன் கடைவீதி மூடப்பட்டது தெரியாமல் திருமண நிகழ்ச்சிக்கு புடவை எடுக்க வந்தவர்கள் பலர் திரும்பிச் சென்றனர்.
இதையும் படிங்க: 'மேகதாதுவில் நிச்சயம் அணை கட்ட முடியாது - பொன்.ராதாகிருஷ்ணன்'