சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து அந்த மசோதாவின் நகலை தீவைத்து எரித்து போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவி, கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு சட்டத்திருத்த மசோதாவை தீவைத்து எரித்தனர்.
அப்போது காவல் துறையினருக்கும் எஸ்டிபிஐ கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினர் அவர்களைக் கைது செய்தனர்
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவி பேசுகையில், “இரண்டாவது முறையாக பொறுப்பேற்றிருக்கும் பாஜக அரசு காஷ்மீருக்கான சிறப்புச் சட்டம் 370 ரத்து, பாபர் மசூதி விவகாரம் இப்போது குடியுரிமை சட்டத்திருத்த மசோதா என்று தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிரான செயல்பாடுகளை முன்னெடுத்துவருகிறது.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா சட்டம் என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது; சர்வதேச விதிகளுக்கு எதிரானது; ஜனநாயகம், மதச்சார்பின்மைக்கு எதிரானது. மிகக் குறிப்பாக இந்த நாட்டில் வாழும் இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவதற்கான முயற்சிகளில் ஒரு பகுதியாக இந்தச் சட்டம் இருக்கிறது.
மத்திய அரசு இந்தச் சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்தப் போராட்டத்தின் வீரியம் தீ ஜுவாலையாக நாடு முழுவதும் வெடித்துக் கிளம்பும் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கும் என்று நாங்கள் எச்சரிக்கை செய்கிறோம்” என்றார்.
இந்தப் போராட்டம் தலைநகர் சென்னை மட்டுமின்றி திருச்சி, கோவை, விழுப்புரம் உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் நடைபெற்றது.