இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு ஊரடங்கு காரணமாக வெளியேற முடியாமல் தப்லீக் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் தவித்து வந்த பலரும், கரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். இதையடுத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள பலர் பரிசோதனை அடிப்படையில் வைரஸ் தொற்று இல்லை என்று சான்றளிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கரோனா வைரஸ் தொற்று இருப்பதன் காரணமாக, சிலர் மருத்துவமனை கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தச் சூழலில் மருத்துவமனை கண்காணிப்பிலும், வைரஸ் தொற்று இல்லை என்று கண்டறியப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் போதிய உணவு, மாற்று உடை இல்லாமல் பெரும் இன்னல்களை சந்தித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொற்று இல்லை என்று சான்றளிக்கப்பட்டவர்களிடம், இனி தங்குவதற்கான ஏற்பாட்டை அவர்களே செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் பெரும் துன்பங்களைச் சந்திக்க வேண்டிய சூழல் நிலவுகின்றது. இப்படியான சூழலில், பிகார் மாநில அரசு தங்கள் மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கு உரிய வசதிகளை தங்கள் மேற்பார்வையில் செய்து தந்துள்ளது.
ஆகவே, தமிழ்நாடு அரசும் தலைநகர் டெல்லியில் பெரும் இன்னல்களைச் சந்தித்து வரும் தமிழர்களுக்கு உடனடியாக உதவிகளை செய்ய முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறோம். ஊரடங்கு நீட்டிக்கப்படும் பட்சத்தில் வைரஸ் தொற்று இல்லை என்று சான்றளிக்கப்பட்டவர்களை உடனடியாக தமிழகம் அழைத்துவர உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
முடிந்தால் அங்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களையும் தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து, தொடர்ந்து அவர்களை மருத்துவக் கண்காணிப்பில் வைக்கும் முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். இதற்காக சிறப்பு அதிகாரி ஒருவரை நியமித்து, அதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசை எஸ்டிபிஐ கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.