சென்னை: சென்னை மாவட்டத்திலுள்ள அரசு, சென்னை பள்ளிகள், ஆதிதிராவிடர் நலத்துறை சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் 140 பேருக்கு செப்டம்பர் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கும் போது மேற்கொள்ள வேண்டிய தூய்மை பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பள்ளிகள் திறக்கும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விரிவாக அறிவுறுத்தப்பட்டது. மேலும், தற்போது மழைக்காலம் என்பதால் அதற்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.
பள்ளி கட்டடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்வதுடன், கழிப்பறை, சிறுநீர் கழிப்பிடம் ஆகியவையும் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
பள்ளியின் நுழைவாயிலில் கை கழுவுவதற்கு கிருமிநாசினி அல்லது சோப்பு தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளதா? எனவும், மாணவர்களை தெர்மல் ஸ்கேனர் கொண்டு ஆய்வு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
வகுப்பறையில் மாணவர்கள் தகுந்த இடைவெளியை கடைபிடித்து அமரும் வகையிலும், நாள்தோறும் முகக்கவசம் அணிந்து வருவதை உறுதி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறையில் தயார் செய்ய வேண்டுமெனவும், மாணவர்களுக்கான கால அட்டவணை தயார் செய்து பாடம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டன.
மேலும், செப்டம்பர் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறப்பதற்கு முன்னர் மூன்று நாட்கள் மட்டுமே இருப்பதால் இந்த வாரமே பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணியை முடிக்க வேண்டுமென அறிவுரை வழங்கினார்.