சென்னை: பேருந்து பயண டிக்கெட் முறைக்கு மாறாக இ- டிக்கெட் வழங்கும் முறை இந்தாண்டு இறுதிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்த பின், gpay, மொபைல் ஸ்கேனிங் உள்ளிட்ட முறைகளை பயன்படுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் எனவும் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் வரை பழைய பயண அட்டையை பயன்படுத்தி பேருந்தில் பயணம் மேற்கொள்ளலாம் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பேருந்தில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்றும், அதுவரை பழைய பயண அட்டையை பயன்படுத்தி மாணவர்கள் பேருந்தில் பயணம் மேற்கொள்ளலாம் எனக் கூறினார்.
மேலும், பள்ளி வாகனங்களில் முன்புறம் பின்புறம் கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார். பின்னர் பள்ளி திறந்தவுடன் முழுமையாக கண்காணிக்கப்படுவதோடு, மண்டல போக்குவரத்து அதிகாரி மூலம் சோதனை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
பேருந்து பணிமனைகளில் பணிகளில் இருக்கும் பணியாளர்கள் தொடர் விடுப்பில் இருப்பதால் தான் பேருந்து இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை சரி செய்ய தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம் என்றும், ஆய்விற்கு பின் பணியாளர்கள் மீண்டும் பணிக்கு வர தொடங்கியுள்ளதாகவும், வரும் நாள்களில் முழுமையாக சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பேருந்து பயண டிக்கெட் முறைக்கு மாறாக இ- டிக்கெட் வழங்கும் முறை இந்தாண்டு இறுதிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறிய அவர், இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்த பின், gpay, மொபைல் ஸ்கேனிங் உள்ளிட்ட முறைகளை பயன்படுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:9ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி- பள்ளி கல்வித் துறை