சென்னை: கரோனா ஊரடங்கு காரணமாக பெரும்பாலான பெற்றோர், தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளிலும், குறைவான கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளில் சேர்த்துவருகின்றனர்.
மாற்றுச் சான்றிதழ் வழங்குதல் - அரசாணை
கல்விக் கட்டண பாக்கியை உரிமையியல் வழக்குத் தொடர்ந்து வசூலித்துக் கொள்ளலாம் என ஏற்கனவே, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கல்விக் கட்டணம் பாக்கி உள்ளது என்பதற்காக மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்குவதை எந்த ஒரு பள்ளி நிர்வாகமும் மறுக்கக் கூடாது என்று கடந்த ஜூலை 12ஆம் தேதி, தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது.
அரசாணையை எதிர்த்து வழக்கு
இந்த அரசாணையை எதிர்த்து அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் கே. பழனியப்பன் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த மனுவில், மாற்றுச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக, அரசு உதவிபெறாத பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளுக்கும் பொருந்தும் வகையில் பொதுவான உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவு குழந்தைகள் கல்வி உரிமைச் சட்டத்துக்கு எதிரானது என்பதால், இந்த அரசாணைக்குத் தடைவிதிக்க வேண்டும். அரசாணையை ரத்துசெய்ய வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
மனுவிற்கு தமிழ்நாடு அரசு பதில் தர உத்தரவு
இந்த வழக்கை டிசம்பர் 6ஆம் தேதி நீதிபதி எம். தண்டபாணி விசாரித்தபோது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயன் முன்னிலையாகி வாதிட்டார். அதன்பின்னர் வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு நான்கு வாரங்களில் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஊட்டம் தரும் காய்கறித் தோட்டத் திட்டம்: ஸ்டாலின் தொடங்கிவைப்பு