சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்தும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடுவது குறித்தும் முதலமைச்சரிடம் ஆலோசிக்கப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
+2 தேர்வு முடிவு
சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் தயாராக உள்ளது.
இந்த முடிவினை வெளியிடுவது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்தோம். அனுமதி அளித்தவுடன் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது குறித்தும் முதலமைச்சரிடம் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படவில்லை.
நீட் தேர்வு வேண்டாம் என்பது எங்களின் முடிவு
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் முறையாக நடத்தப்படுகிறதா என்பது குறித்து நாளை (ஜூலை 16) நடைபெறும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.
அதனைத்தொடர்ந்து பயிற்சியை வழங்குவது குறித்தும் முடிவெடுக்கப்படும்.
ஏற்கெனவே மாணவர்களுக்கு நீட் பயிற்சிகள் ஆன்லைன் மூலம் வீடியோவாக வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு வேண்டாம் என்பது எங்களின் முடிவாக உள்ளது. ஆனால், எதிர்பாராதவிதமாக நீட் தேர்வு அறிவிக்கப்பட்டது எனக்கு வருத்தமாக உள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: 'திட்டங்களுக்காக இயற்கையை அழிக்கக் கூடாது - அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை'