சென்னை: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை ரத்துசெய்து ஒன்றிய அரசு நேற்று (ஜூன் 1) அறிவிப்பை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நடைபெறுமா அல்லது ரத்துசெய்யப்படுமா என்கிற கேள்வி எழுந்தைத் தொடர்ந்து, இன்று (ஜூன் 2) காலை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இரண்டு நாள்கள்
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ், "ஏற்கனவே ஒன்றிய அரசுடன் நடைபெற்ற ஆலோசனையில் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பல்வேறு மாநிலங்களும் கோரிக்கைவிடுத்தன.
தமிழ்நாடும் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது.
இந்நிலையில், நேற்று பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை ரத்துசெய்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.இதனால், தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்து பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்களிடம் இரண்டு நாள்களில் கருத்து்களைப் பெற்று, அதன்பின்னர் தேர்வு குறித்து முடிவுசெய்யப்படும்.
தெளிவில்லாத அறிவிப்பு
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வை ரத்துசெய்துள்ளது குறித்த பிரதமரின் அறிவிப்பு தெளிவில்லாமல் உள்ளது. முதலில் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டாம் எனவும் பின்னர் விருப்பப்பட்டால் தேர்வு எழுதலாம் எனவும் தெளிவற்ற முறையில் அறிவிப்பு உள்ளது" என்றார்.
மேலும், அனைத்துத் தரப்பினரும் கருத்து்கள் தெரிவிக்க tnschoolerdu21@gmai.com என்ற மின்னஞ்சல் முகவரியும்; சந்தேகங்கள் குறித்து விசாரிக்க 14417 என்ற இலவச உதவி அலைபேசி எண்ணையும் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா தடுப்புப் பணிகள்: மருத்துவ வல்லுநர் குழு ஆலோசனை