சென்னை: தமிழ்நாட்டில், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்கனவே 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு அமலில் உள்ளது. இந்நிலையில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 2.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, துறை சார்ந்த அமைச்சர்கள், அலுவலர்கள், இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
இந்த கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
கடந்த ஜூன் 5ஆம் தேதி உயர்கல்விக்காக நடத்தப்படும் "நீட்" போன்ற அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்ய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதற்கிடையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என்றும் தமிழ்நாட்டில் நீட் வராமல் இருக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.