சென்னை: ஈரோடு சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் கோவை - பெங்களூரு சாலையில் இரவு நேரங்களில் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கக்கோரி யானைகள் நல ஆர்வலரான எஸ்.பி.சொக்கலிங்கம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதையடுத்து, இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதித்து, ஈரோடு மாவட்ட ஆட்சியர் 2019ஆம் ஆண்டு உத்தரவை முறையாக அமல்படுத்தும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. குறிப்பாக, மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்து வந்தது. அதேபோல், கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரியும் வழக்குகள் தொடரப்பட்டன.
ஆட்சியரின் அறிக்கை: இந்த வழக்குகளில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த அறிக்கையில், 'சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாக செல்லும் சாலையில், ஆறு சக்கரங்களுக்கு மேல் கொண்ட வாகனங்கள் செல்ல மாலை 6 மணி முதல் காலை 5 மணி வரை தடை விதிக்கலாம். இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஆம்புலன்ஸ் போன்ற மருத்துவ அவசர வாகனங்கள், பொது போக்குவரத்து வாகனங்கள் தவிர, பிற வாகனங்களை இயக்க தடை விதிக்கலாம்' எனத் தெரிவிக்கப்பட்டது.
ரிசார்ட்கள் மீது நடவடிக்கை: எதிர் மனுதாரர் சொக்கலிங்கம் தரப்பில், 'வனப்பகுதியில் கட்டப்பட்டுள்ள 45 சொகுசு விடுதிகள் (ரிசார்ட்கள்) மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. பவானிசாகர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பி.எல்.சுந்தரம் தரப்பில், 'இந்த தடை உத்தரவால் பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் மலைகிராம மக்கள், உள்ளூர் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' எனவும் வாதிடப்பட்டது.
அரசு தரப்பு வாதம்: ஈரோட்டை சேர்ந்த கண்ணையன் என்பவர் தரப்பில், 'விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியருக்கு இந்த தடை உத்தரவை பிறப்பிக்க அதிகாரம் இல்லை. மேலும், மருத்துவ அவசரத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்' என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு தரப்பில், 'உள்ளூர் கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்குகளில் இன்று (ஏப். 06) தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் கீழ்வருமாறு:
- சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் கோவை - பெங்களூரு சாலையில் 12 சக்கரங்களுக்கு மேல் உள்ள வாகனங்களும், 16.2 டன்னுக்கும் மேல் எடையுள்ள வாகனங்கள் எப்போதும் அனுமதி கிடையாது.
- அதற்கு கீழ் உள்ள வாகனங்கள் மாலை 6 மணிக்கு மேல் காலை 6 மணிக்குள் அனுமதிக்கப்படும். அந்த சாலையில் அனுமதிக்கப்படும் வாகனங்கள் மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது
- தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகளின் பொது போக்குவரத்து வாகனங்களுக்கும், இரு சக்கர வாகனங்களுக்கும் காலை 6 மணி முதல் இரவு 9 வரை மட்டுமே அனுமதி உண்டு. பால் மற்றும் மருத்துவ பொருட்கள் எடுத்து செல்லும் வாகனங்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது.
- 27 கி.மீ. தூரமுள்ள சாலையில், ஒவ்வொரு 5 கி.மீ தூரத்திற்கும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். மின் இணைப்பு இல்லாத இடங்களில் சூரிய ஒளி மூலம் இயங்கும் சிசிடிவி பொருத்த வேண்டும். அவற்றின் பதிவுகளை 45 நாட்களுக்கு பாதுகாக்கும் வகையில் அமைக்க வேண்டும்.
- வணிக பயன்பாட்டிற்கான வாகனங்களிடம் கட்டணம் வசூலித்து, அதை சாலை மற்றும் சிசிடிவி பராமரிப்பதற்கு பயன்படுத்தலாம். 27 கி.மீ சாலையில் உள்ள கிராம மக்களின் வாகனங்களை புகைப்படத்துடன் கூடிய பாஸ் வழங்கி வாகனங்களை அனுமதிக்கலாம்.
- வனவிலங்குகள் சாலையை எளிதாக கடக்கும் வகையில் மேல்மட்ட அல்லது கீழ்மட்ட பாலங்களை அமைக்க வேண்டும். வனவிலங்குகளுக்கு ஒரு போதும் சிரமங்கள் இல்லாத வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
- அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் மற்றும் பழங்குடியினர் உரிய அனுமதியுடன் சென்று வரலாம்.
- மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்களும் உரிய அனுமதியுடன் செல்லலாம்
வழக்கில் தீர்ப்பில் பல்வேறு கட்டுப்படுகளை விதித்து இந்த வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.