பெங்களூர்: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா நடராஜன், சொத்துக் குவிப்பு வழக்கில் 4 வருடம் சிறைதண்டனைப் பெற்று, கர்நாடகா மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.
இச்சூழலில் ஜனவரி 27ஆம் தேதி அவரது விடுதலை தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் காய்ச்சலால் அவதிப்பட்ட சசிகலாவை ஜனவரி 20ஆம் தேதி பவுரிங் அரசு மருத்துவமனையில் சிறை நிர்வாகம் அனுமதித்தது. தொடர்ந்து அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால், விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இவர் தற்போது அங்கு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரது விடுதலை தேதி அறிவிக்கப்பட்ட நாளான நேற்று, முறைபடி சசிகலா விடுதலை செய்யப்பட்டார்.
இதனிடையில் அனைவரின் மனதிலும் ஒரு கேள்வி எழுந்துள்ளதை உணரமுடிந்து, அதற்கான விடையை இங்கு பகிர்ந்துள்ளோம். சசிகலா சிறையில் என்ன வேலை செய்தார்? அவருக்கு அதற்காக ஊதியம் ஏதேனும் வழங்கப்பட்டதா? என்ற கேள்விகளுக்கான விடையை கீழ்வருமாறு தொகுத்துள்ளோம்.
- சிறையின் தோட்டக்கலை பிரிவில் ஒரு வருடம் வேலை பார்த்துள்ளார் சசிகலா
- சசிகலா அணியில் மொத்தம் 6 பேர் இந்த தோட்ட வேலைகளைக் கவனித்து வந்துள்ளனர்.
- அதில் அவரது உறவினரான இளவரசியும் ஒருவர்
- காய்கறிகள், பப்பாளி பழங்கள் நட்டு பராமரிப்பது இவர்களது வேலை
- இவர் மேற்கொள்ளும் அனைத்து வேலைகளும் சிறை நிர்வாகத்தின் விதிகளுக்கு உட்பட்டே கொடுக்கப்பட்டுள்ளன
- இதற்காக தினக்கூலியாக ரூ.75 சசிகலாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
- இவர்கள் விளைவித்த காய்கறிகள் அனைத்தும் சிறை சமையலறைக்கு கொடுக்கப்படும்
- சசிகலாவும், இளவரசியும் ஆசிரியர் மூலம் கன்னட மொழி பேசவும், எழுதவும் கற்றுள்ளனர்
- கன்னட மொழி பேசவும், எழுதவும் இருவரும் நேர்த்தியாக கற்றுத் தேர்ந்ததாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது
சசிகலாவின் விடுதலை செய்தி வெளியானதில் இருந்து தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் அனல் பறக்க தொடங்கியுள்ளது. யார் யார் எங்கு தாவுவார்கள் என்பது போன்ற கருத்துக் கணிப்புகள் உலா வந்த வண்ணமுள்ளன.