சசிகலாவை அவர் தங்கியுள்ள தி.நகர் இல்லத்தில் இன்று பிரபல திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் மற்றும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார், அவரது மனைவி நடிகை ராதிகா உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாரதிராஜா, தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பவே சாதனை தமிழச்சியான சசிகலா வந்துள்ளதாகத் தெரிவித்தார்.
அடுத்ததாகப் பேசிய சரத்குமார், “10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுக கூட்டணியில் தொடர்ந்து பணியாற்றிய போது, சசிகலாவுடன் ஏற்பட்ட நல்ல உறவின் காரணமாக அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க வந்தோம். ஜெயலலிதாவோடு ஒன்றிணைந்து கட்சிப் பணியாற்றியவர் சசிகலா.
’நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று’ என்ற குறளை அனைவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். சசிகலாவுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து, அவர் முடிவு செய்த பிறகு நான் பதில் கூற முடியும். ஒன்று இரண்டு இடங்கள் தரும் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதை ஏற்கெனவே கூறியிருக்கிறேன்” என்று கூறினார்.
இதையும் படிங்க: அரசு வெற்றி நடை போடவில்லை; கடனில் தள்ளாடுகிறது - டிடிவி.தினகரன்