கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து, முடித்திருத்தகங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டது. தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சலூன் கடைகளை திறக்க அனுமதிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு முடித்திருத்துவோர் நலச்சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதில், ஊரடங்கிற்கு முன்னதாக 15 ஆயிரம் ரூபாய்வரை, மாத வருவாய் ஈட்டி வந்த சுமார் 10 லட்சம் முடிதிருத்தும் தொழிலாளர்கள், கடந்த 2 மாதங்களாக எந்த வித வருவாயுமின்றி, வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.
எனவே, வருவாயில்லாமல் இருக்கும் மாநிலம் முழுவதுமுள்ள முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு, தலா 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், அவர்களின் குடும்பங்கள் பட்டினி சாவினால் பாதிக்கப்படும் முன் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சலூன் கடைகளையும் உடனடியாக திறக்க உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வழக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், சலூன் கடை வைத்திருப்பவர்கள் வறுமையில் உள்ளதாகவும், சிலர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதனால், நிபந்தனைகளுடன் கடைகளை திறக்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சலூன் கடைகளை தற்போது கிராமப் பகுதிகளில் மட்டுமே திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மற்ற பகுதிகளில் படிப்படியாக கடைகள் திறப்பது தொடர்பாக அரசு அறிவிக்கும் என்றும் தெரிவித்தார். இது குறித்து அரசிடம் உரிய பதிலை பெற்று அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு கூறி வழக்கு விசாரணையை மே 28 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் - எல்.முருகன் வலியுறுத்தல்