கோயம்பேடு காய்கறி அங்காடி பகுதியில் சலூன் கடை ஒன்று அமைந்துள்ளது. இக்கடையில் இன்று (ஆகஸ்ட் 6) நண்பகல் 1 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. அப்போது அங்கு பணியில் இருந்த தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக கோயம்பேடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தால் கடையிலிருந்த ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாயின.
கரோனா தொற்று காரணமாக கடந்த நான்கு மாதங்களாக கோயம்பேடு காய்கறி அங்காடி மூடப்பட்டுள்ளது. இதனால் ஆட்கள் யாருமின்றி வெறிச்சோடி காணப்படும் சந்தைப் பகுதியில், தூய்மைப் பணியாளர்கள் மட்டும் சுத்தம் செய்து விட்டு செல்கின்றனர். இந்நிலையில், அங்கு திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மின் அழுத்தம் காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: குஜராத்: மருத்துவமனை தீ விபத்தில் எட்டு நோயாளிகள் உயிரிழப்பு!