சென்னை : நடிகை அளித்த பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது கட்டாயக் கருக்கலைப்பு மற்றும் பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் வழக்கிற்கான உரிய ஆதாரங்களை திரட்டி கடந்த ஜூன் மாதம் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பெங்களூருவில் வைத்து தனிப்படை காவலர்கள் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் மணிகண்டனை 2 நாள் காவலில் எடுத்தும் காவலர்கள் விசாரணை நடத்தினர்.
முன்னாள் அமைச்சர் மணிகண்டன்
இந்த வழக்கின் முக்கிய ஆதாரமான மணிகண்டனின் 2 செல்போன்களை காவலர்கள் பறிமுதல் செய்து சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டார்.
மேலும், குற்றஞ்சாட்டிய நடிகை மற்றும் வழக்கில் நடிகைக்கு கருக்கலைப்பு செய்ததாக கூறப்படும் மருத்துவர் அருண்குமார் உள்ளிட்ட சாட்சிகளிடம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலமும் பெறப்பட்டது.
குற்றப் பத்திரிகை
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது போடப்பட்ட வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் 341 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை அடையாறு அனைத்து மகளிர் காவலர்கள் தாக்கல் செய்தனர்.
மேலும், அவர் மீதான வழக்கில் ஏற்கனவே பதிவு செய்யபட்ட 6 பிரிவுகளுடன் சேரத்து மேலும் 2 பிரிவுகளையும் (342 and 352 IPC) சேர்த்து அடையாறு அனைத்து மகளிர் காவல் காவல் துறையினர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.
ஜன.4 ஆஜராக உத்தரவு
அதுமட்டுமல்லாமல் இந்த வழக்கில் நடிகையோடு சேர்த்து 5 பேர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு முன்னாள் அமைச்சருக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்ததாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மீதான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட 341 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை ஏற்று சைதாப்பேட்டை 9ஆவது நீதிமன்ற நீதிபதி மோகனம்பாள் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சம்மன் அனுப்பி வரும் ஜனவரி மாதம் 4 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க : பாலியல் வழக்கு - முன்னாள் அமைச்சர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்