செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பல்லாவரத்தை அடுத்த சங்கர் நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் சிலருக்கு மூச்சுத் திணறல், காய்ச்சல் போன்ற அறிகுறி தென்பட்டதால், அங்கு பணிபுரியும் அனைத்துக் காவலர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
சோதனை முடிவில் ஒன்பது காவலர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து பம்மல் நகராட்சி சார்பில் காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பிளீச்சிங் பவுடர் போடப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது.
சங்கர் நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் நாளுக்கு நாள் கரோனா தொற்றுக்கு ஆளாகி வந்ததால். பிற காவலர்கள் பீதியில் இருந்தனர். இச்சூழலில் கரோனா தொற்றுக்கு சிகிச்சைபெற்று வந்த ஒன்பது காவலர்களில் நான்கு காவலர்கள் குணமடைந்து மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளனர்.
இவ்வேளையில் சங்கர் நகர் காவல் நிலையத்தில் பணிபுரிந்துவந்த உதவி ஆய்வாளர் செல்வமணி என்பவருக்கு கரோனா அறிகுறி இருந்ததால், அவருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கரோனா உறுதிசெய்யபட்டது. இதையடுத்து அவர் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.