சென்னை : சென்னை கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ் ரூ.82 லட்சம் மதிப்பில் மக்களை கவரும் விதமாக செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது.
'நமக்கு நாமே ' திட்டத்தின் மூலம் சென்னை கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ் ரூ.82 லட்சம் மதிப்பில் நீரூற்றுடன் கூடிய பூங்கா அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
மாநகராட்சிப் பண்ணையிலிருந்து பெறப்பட்ட அலங்காரச் செடிகள் மற்றும் புல்தரைகளுடன் அமைக்கப்பட்டு வரும் இப்பூங்காவில் பிச்சிப்பூ, அரளிப் பூ , செம்பருத்தி, காகிதப் பூ உள்ளிட்ட பல்வேறு வகையிலான பூஞ்செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
பூங்காவின் மையத்தில், பார்வையாளர்களைக் கவரும் விதமாக செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது. பெருங்குடி குப்பைக் கிடங்கில் பயோ மைனிங் முறையில் கல், மணல், நெகிழிகள் குப்பையிலிருந்து தனித்தனியே பிரித்தெடுக்கப்படும் நிலையில் இப்பூங்கா அமைக்கத் தேவையான மணல் பெருங்குடியில் இருந்து எடுத்து வரப்பட்டு , குப்பைகளிலிருந்து பெறப்படும் இயற்கை உரங்கள் செடிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
சென்னையில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் விதமாக தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் 'நமக்கு நாமே' திட்டத்தில் தற்போது வரை 8 தனியார் நிறுவனங்கள் 49 லட்சம் நிதியை மாநகராட்சியிடம் வழங்கியுள்ளது. மேலும் பெருநகர சென்னை மாநகராட்சியால் 387 கிமீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சாலைகள் அனைத்தும் மாநகராட்சியின் சார்பில் நாள்தோறும் தூய்மையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் 102 சாலை மையத்தடுப்புகளும், 112 போக்குவரத்து தீவுத்திட்டு பூங்காக்களும் பரமாரிக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க : வெளுத்து வாங்கும் வெயிலை சமாளிக்கும் தேங்காய்ப்பூ... விற்பனை அமோகம்!