சென்னை விமான நிலையத்திற்குப் பெருமளவில் கடத்தல் பொருள்கள் கொண்டுவரப்படுவதாக விமான நிலைய சுங்கத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து சுங்கத் துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். பின்னர் வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மலேசியாவிலிருந்து வந்த விமானத்தில் பயணம்செய்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த அப்துல் ரகுமான் (21) என்பவரிடமிருந்து ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 334 கிராம் தங்கத்தை பறிமுதல்செய்தனர். இதனையடுத்து சிங்கப்பூரிலிருந்து இலங்கை வழியாக வந்த விமானத்தில் பயணம்செய்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த சால்மன் பாரீஸ் (25) என்பவரிடமிருந்து ரூ.18 லட்சத்து 17 ஆயிரம் மதிப்புள்ள 410 கிராம் தங்கத்தைப் பறிமுதல்செய்தனர்.
அதேபோல் கொழும்பிலிருந்து வந்த விமானத்தில் பயணம்செய்த இலங்கையைச் சேர்ந்த பாத்திமா பாஸ்மியா (39) என்பவரிடமிருந்து ரூ.21 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 485 கிராம் தங்கத்தைப் பறிமுதல்செய்தனர். இவர்கள் மூவரிடமிருந்தும் மொத்த ரூ. 54 லட்சத்து 67 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ 229 கிராம் தங்கம் பறிமுதல்செய்யப்பட்டது. இதன் பின்னணியில் யார் உள்ளனர் எனச் சுங்கத் துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையுடன் படிங்க; 21 அரிவாள் மீது 68 முறை நடந்து அருள்வாக்கு கூறிய பூசாரி