நிவர் புயல் இன்று காலை நிலவரப்படி சென்னைக்கு தென் கிழக்கில் 450 கிலோ மீட்டர் தூரத்திலும், புதுச்சேரிக்கு கிழக்கு - தென் கிழக்கு திசையில் 410 கிலோ மீட்டர் தூரத்திலும் மையம் கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த புயல் அதி தீவிர புயலாக மாறி நாளை மாலை மாமல்லபுரம் - காரைக்காலுக்கு இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயலால் கடலோர தமிழகம், புதுச்சேரி வடக்கு உள் மாவட்டங்களில் இன்று முதல் 26 ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் பாதிப்பை எதிர்கொள்ள மாமல்லபுரத்தில் பேரிடர் மீட்புக்குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வேலூர் வடமேற்கு மண்டலம் தீயணைப்பு துணை இயக்குநர் சத்தியநாராயணன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகளுடன், மொத்தம் 40க்கும் மேற்பட்டோர் தயார் நிலையில் உள்ளனர்.
அதேபோல், செங்கல்பட்டு, செய்யூர், மறைமலைநகர் போன்ற பகுதியிலில் இருந்தும் தீயணைப்பு வாகனம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மாமல்லபுரம் வந்துள்ளனர். ரப்பர் போட், லைஃப் ஜாக்கெட், மரம் அறுக்கும் இயந்திரங்கள், ஜெனரேட்டர் போன்ற அவசர மீட்பு கருவிகளும் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
மீனவர்களின் படகு மற்றும் மீன்பிடி வலைகள் ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் டிராக்டர்கள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு நிறுத்தப்பட்டு வருகின்றன. மேலும், போதிய இடங்கள் இல்லாததால் சாலைகளில் படகுகளை நிறுத்தி மீனவர்கள் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிற்பகல் 3 மணியில் இருந்து பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. முக்கிய சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் புயல் காரணமாக கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: சென்னையில் கடும் கடல் சீற்றம்!