ஆந்திர மாநிலம் நகரி சட்டப்பேரவை உறுப்பினர் ரோஜா இன்று சித்தூர் எம்.பி. ரேடப்பாவுடன் இணைந்து நகரி சட்டப்பேரவைத் தொகுதி மற்றும் சித்தூர் நாடாளுமன்ற தொகுதிகளில் செயல்படுத்த வேண்டிய ரயில்வே திட்டங்கள் தொடர்பாக, தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ்-ஐ நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
அதன்பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் கூறுகையில், "எங்கள் தொகுதிகளில் செயல்படுத்த வேண்டிய ரயில்வே திட்டங்கள் குறித்த கோரிக்கைகளை தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் முன் வைத்தோம். கடந்த முறை வைக்கப்பட்ட கோரிக்கைகளில் 75 விழுக்காடு நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றபோது அவர் யார் என்றே தெரியாது. தற்போது மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி சிறந்த தலைவராக உருவெடுத்துள்ளார். அரசியலில் வெற்றிடம் உள்ளது என்ற ரஜினிகாந்த் கூறியது தவறு. அவர் ஏன் அவ்வாறு கூறினார் என்று தெரியவில்லை.
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் மக்களுக்காக பணியாற்ற வேண்டும். ஏசி அறையில் அமர்ந்துகொண்டு செய்தியாளர் சந்திப்பு நடத்தினால் மட்டும் போதாது. ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
தேர்தலுக்கு முன் தனது பாதயாத்திரையில் கொடுத்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் ஜெகன்மோகன் ரெட்டி போல் நமக்கு ஒரு முதலமைச்சர் இல்லையே என மக்கள் நினைக்கின்றனர், இவ்வாறு கூறினார்.
இதையும் படிங்க: உதயமானது செங்கல்பட்டு மாவட்டம் - தொடங்கி வைத்த முதலமைச்சர்!