சென்னை: மா. சுப்பிரமணியன் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சைக்கான உபகரணங்களை இன்று (பிப்ரவரி 16) காலை பார்வையிட்டார். இந்நிகழ்வில், சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய மா. சுப்பிரமணியன், "தொற்றா நோய்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் சிறப்பு மருத்துவ வசதிகள் தொடர்ந்து செய்யப்பட்டுவருகின்றன. கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுவருகின்றன.
புற்றுநோயாளிகளுக்குப் பயன்படும்
அதன்படி 35 கோடி ரூபாய் மதிப்பில் ரோபோடிக் அறுவை சிகிச்சை சாதனம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 50 லட்சம் மதிப்பில் அறுவை சிகிச்சை அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 74 இடங்களில் மட்டுமே இது உள்ளது. மாநில அரசு நடத்தும் மருத்துவமனையில் எந்த இடங்களிலும் இந்த வசதி இல்லை.
புற்றுநோயை முதல் நிலை, இரண்டாம் நிலையிலே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள புற்றுநோயாளிகள் குறித்த பதிவேடு தயாரிக்கப்பட்டுவருகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரோபோடிக் அறுவை சிகிச்சை இயந்திரம் உதவும். மக்களைத் தேடி மருத்துவம் மூலம் இதுவரை 49.79 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
இன்னுயிர் காப்போம் திட்டம்
மேலும், மக்களைத் தேடி மருத்துவத்தில் 50 லட்சமாவது பயனாளியைக் கண்டறிந்து வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 20) காலை 11 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டம் சிட்லப்பாக்கத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அதிநவீன உயர் ரகம் வசதிகளுடன் கூடிய 188 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சேவையை முதலமைச்சர் தொடங்கிவைக்கிறார்.
'இன்னுயிர் காப்போம் - நம்மை காப்போம் 48' திட்டத்தில் இணைந்துள்ள மருத்துவமனைகளின் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளது. 35 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அறுவை சிகிச்சை இயந்திரத்தை விரைவில் முதலமைச்சர் தொடங்கிவைக்கிறார்.
ஐந்து வயதிற்கு மேற்பட்டவர்கள் முகக் கவசம் அணிந்தால் போதுமானது. புதிதாக தொடங்கிவைக்கப்படவுள்ள 188 ஆம்புலன்ஸ் வாகனங்களில் உயிர்காக்கும் அதிநவீன உபகரணங்கள் கொண்டவை. 'இன்னுயிர் காப்போம்' திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு விபத்தில் சிக்குபவர்களுக்கு உதவுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எட்டு மாத ஆட்சியில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றம் - திமுக தலைவர் ஸ்டாலின்