சென்னை: தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் தொடக்கக் கல்வித் துறையில் மாணவர்கள் சேர்க்கப்பட்ட விவரம், புதியதாக மழலையர், தொடக்கப் பள்ளிகள் உள்ளிடவற்றை தொடங்குவது குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலர் செப்டம்பர் 28ஆம் தேதி ஆய்வு செய்கிறார்.
தொடக்கக் கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “2020-21ஆம் கல்வி ஆண்டில் அரசு நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகள், சுயநிதிப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையில் மாணவர்கள் சேர்க்கப்பட்ட விவரத்தை அளிக்க வேண்டும்.
காலாண்டு விடுமுறைக்கு பிறகு திறக்கப்படுகின்றனவா பள்ளிகள்?
மேலும், 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகளில் இந்த கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைச் செய்யப்பட்ட விவரத்தை அளிக்க வேண்டும். மாணவர்கள் சேர்க்கை விவரத்தை கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த விவரத்தை அளிக்க வேண்டும்.
ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளி கட்டடங்களில் பழுதுபார்ப்பு பணிக்கு உள்ளாட்சித் துறைக்கு அளித்துள்ள விவரங்கள், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் பயன்பாட்டில் இல்லாத பாதுகாப்பற்ற இடிக்கப்பட வேண்டிய கட்டடங்களில் விவரங்களையும் அளிக்க வேண்டும். மேலும், தேவைப்படும் கூடுதல் கட்டடங்களின் விவரத்தையும், குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகளின் தேவையையும் அளிக்க வேண்டும்.
பணம் வசூலிக்கும் அரசுப் பள்ளிகள்: பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் ஈராசிரியர் பள்ளிகளில் கடந்தாண்டு மாறுதல் பெற்று விடுவிக்கப்படாமலுள்ள ஆசிரியர்களை, பணி மாறுதல் பெற்ற பள்ளிக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்த விவரத்தையும் அளிக்க வேண்டும். அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2019-20ஆம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை விவரத்தின் அடிப்படையில் ஆசிரியர் பணியிட நியமனம் செய்வது குறித்தும் விவாதிக்கப்படும்.
புதிய மழலையர், தொடக்கப் பள்ளிகள் தொடங்குவதற்கான கருத்துகளை முழுமையாக அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும்” என அதில் கூறப்பட்டுள்ளது.