சட்டப்பேரவையில் இன்று விதி 110ன் கீழ் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது கடந்தாண்டு 58 இல் இருந்து 59 ஆக உயர்த்தப்பட்டது என்றும், இனி ஓய்வு பெறும் வயது வரம்பு 60 ஆக உயர்த்தப்படும் எனவும் அறிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவும் எதிர்ப்பும் கலந்த கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.
பல்கலைக்கழக மானியக்குழுவின் முன்னாள் துணைத்தலைவரும், சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியருமான தேவராஜ் இது குறித்து கருத்து தெரிவிக்கும்போது, ”அரசின் இந்த அறிவிப்பால், தற்போது அரசுப்பணியில் இருப்பவர்களுக்கு ஓராண்டு பணிக்காலம் கூடுதலாக கிடைப்பது நல்லதுதான். ஆனால் பெரும் கடனிலும், நஷ்டத்திலும் இருப்பதாகக் கூறும் தற்போதைய அரசு இதனை செய்திருக்கக்கூடாது.
ஓய்வூதியம் வழங்குவதில் தொடர்ந்து பற்றாக்குறை இருந்து வருகிறது. சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த 2017-18 ஆண்டு முதல் ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதியமே பெறவில்லை. 59 வயதில் ஓய்வு பெறுவோம் என நினைத்து ஓய்வூதியப் பலன்கள் மூலம் தனது பிள்ளைகளுக்கு திருமணம், வீடு வாங்குதல் போன்ற செலவினங்களை திட்டமிட்டு இருந்தவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதால், படித்த பட்டதாரிகளுக்கு பணி கிடைப்பது மேலும் ஓராண்டுக்கு தள்ளிப்போகும். தனது பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் இதுபோன்ற அறிவிப்பை அரசு வெளியிடுவது தவறானது. ஆட்சிக்கு வந்தபின் இது போன்ற அறிவிப்பை வெளியிடுவதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை” என்றார்.
இதையும் படிங்க: அரசுப் பணியாளர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்வு - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு