சென்னை: ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது பாதிக்கப்பட்ட பட்டியலின பெண்ணிற்காக நீதிமன்றத்தில் வாதாடி நீதி பெற்றுத்தந்தார். இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் எடுக்கப்பட்டது.
இது போன்று மீண்டும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பட்டியலின ஐஐடி மாணவிக்கு ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு உதவியால் காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. சென்னை ஐஐடியில் மேற்கு வங்க பட்டியலின மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கானது பதிவு செய்யப்பட்டது.
ஆனால் பலமாதங்கள் வழக்கு முறையாக விசாரணை இல்லாமல் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சென்னை ஐஐடி மாணவியின் நண்பர்கள் ஜெய்பீம் படத்தை பார்த்துவிட்டு, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவிடம் பாதிக்கப்பட்ட மாணவியை அணுக உதவியுள்ளனர்.
ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை பொறுமையாக கேட்டு சட்டப்படி நடவடிக்கையை தீவிரப்படுத்த உதவி இருப்பது தெரியவந்துள்ளது. கிடப்பில் போடப்பட்ட அந்த வழக்கை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று அடுத்தடுத்து கைது நடவடிக்கை மேற்கொள்ள முக்கிய காரணமாக அமைந்தது. தற்போது சிபிசிஐடி விசாரணை மேற்கொள்ளும் வகையில் விசாரணை தீவிரமடைந்து வழக்கு சரியான பாதையில் செல்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு உதவியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு மட்டும் அல்லாது, அவர் கொடுத்த அறிவுரை அடிப்படையில், படத்தில் வருவதைப் போல் அனைத்திந்திய மாதர் சங்கத்தின் உதவியை பாதிக்கப்பட்ட பெண்ணை நாடுமாறு தெரிவிந்திருந்தார். அனைத்திந்திய மாதர் சங்கம், இந்த விவகாரத்தை தொடர்ந்து கையில் எடுத்து காவல்துறை விசாரணையை முடுக்கி விட்டதன் அடிப்படையிலும் சிபிசிஐடி விசாரணை என்பது தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதுவும் வழக்கு சாதாரண பிரிவுகளில் போடப்பட்ட நிலையில், மாணவியின் வாக்குமூலத்தை மீண்டும் பெறப்பட்டு பாலியல் வன்கொடுமை (376) மற்றும் எஸ்சி, எஸ்டி சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டு, விசாரணையானது சிபிசிஐடி காவல் துறையினரால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: திண்டுக்கல்லில் கோர விபத்து- கர்ப்பிணி காவலர் உயிரிழப்பு!