சென்னை: நீதிமன்றம் குறித்து சூர்யா கூறிய கருத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து மூத்த வழக்கறிஞரும், முன்னாள் நீதிபதியும் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
இளநிலை மருத்துவப் படிப்பில் சேர விரும்புபவர்களுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின் படி நீட் (தேசிய தகுதி நுழைவுத்தேர்வு) நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வரும் நிலையில், மாணவி அனிதா மரணம் தொடங்கி, பல மாணவர்கள் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டனர்.
மாணவர்களின் உயிரிழப்பு குறித்து அரசியல் கட்சியினரும், சமூகச் செயற்பாட்டாளர்களும் பரவலாக நீட் தேர்வுக்கு எதிராக கருத்துகளைப் பகிரங்கமாக தெரிவித்து வரும் நிலையில், திரைப்பட நடிகர் சூர்யாவும் கருத்துத் தெரிவித்தார்.
அவர் வெளியட்ட அறிக்கையில், நீட் தேர்வு குறித்த வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் கரோனா அச்சத்தால் உயிருக்குப் பயந்து காணொலி காட்சி மூலமாக வழக்குகளை விசாரிக்கிறது. ஆனால், மாணவர்களை மட்டும் தேர்வறைக்கு வரவழைத்து தேர்வெழுத அனுமதிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடங்களில் பரவிய நடிகர் சூர்யாவின் இந்த கருத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். எம். சுப்ரமணியம், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் மூலம் பரிந்துரை செய்துள்ளார்.
நடிகர் சூர்யாவின் கருத்து சரியானதா? அல்லது தவறாக மிகைப்படுத்தப்படுகிறதா? என உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாட்ஷாவிடம் கேட்டபோது, 'அவதூறு வழக்கை நீதிபதியே எடுக்கப்பரிந்துரை செய்திருப்பதால், அதுகுறித்து கருத்துக்கூற விரும்பவில்லை.
ஆனால், நீதிமன்றங்கள் மீதான மக்கள் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் யாரும் பேசுவதை அனுமதிக்க முடியாது. இதுபோன்ற கருத்துகளால், நீதிமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்து, மக்களே சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளும் சூழல் ஏற்படும்' எனக் குறிப்பிட்டார்.
சூர்யாவின் கருத்து குறித்து மூத்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் கூறும்போது, 'நடிகர் சூர்யாவின் கருத்தில் எந்தத்தவறும் இல்லை. நடப்பில் உள்ள நீதிமன்ற செயல்பாடுகளை மட்டுமே சூர்யா தெரிவித்துள்ளார். அதை நீதிமன்ற அவமதிப்பாக எடுத்துக்கொள்ள முடியாது’ என கருத்து தெரிவித்துள்ளார்.
இதேபோன்ற கருத்தை தான் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தெரிவித்தபோது, அவரை கடுமையாகத் தண்டிக்காமல் ஒரு ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது என்பதையும் சுதா ராமலிங்கம் தெளிவுப்படுத்தினார்.