சென்னை: ரப்பரால் செய்யப்படும் பெல்ட்கள், குழாய்கள், வாகனங்களில் பொருத்தப்படும் சீல்கள் உள்ளிட்டவற்றில் ரப்பருக்கு பதிலாக மக்கும் வகையில் மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவதற்கான ஆராய்ச்சியை மேற்கொள்ள, சென்னை ஐஐடியுடன் ஜேகே பென்னர் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
அதன்படி, பருத்தி, சணல் போன்ற இயற்கை இழைகளை பயன்படுத்தி பெல்ட்களை தயாரிப்பதற்கான ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். இதற்கான ஒப்பந்தம் சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் முதல்வர் மகேஷ் பஞ்சகுனுலா, ஜே.கே.பென்னர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குனர் நாகராஜு ஸ்ரீராமா இடையே மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து பேசிய சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் முதல்வர் மகேஷ் பஞ்சகுனுலா, "இந்த ஆராய்ச்சி இன்றியமையாதது. இயற்கையான ரப்பர் மக்கும் தன்மையுடையதாக இருந்தாலும், பொருட்களை உருவாக்கிய பின்னர், மக்கும் தன்மை குறைவாக உள்ளது. அதற்கு காரணம் மூலக்கூறாக சேர்க்கப்படும் ரசாயனங்கள் சிதைவடையாத தன்னமையில் இருக்கிறது. கார்பன்-கார்பன் ஒற்றைப் பிணைப்புகளைக் கொண்ட அவற்றின் கட்டமைப்பு அம்சத்தின் காரணமாக பெரும்பாலான செயற்கை ரப்பர்கள் மக்கும் தன்மைக்கு ஏற்றதாக இல்லை. எனவே, பொருளாக தாரிக்கப்பட்ட ரப்பர் நீண்ட காலத்திற்கு அதிக சிதைவடையாமல் உள்ளது. இந்த ஆராய்ச்சி ரப்பர் தொழிலில் பெல்ட்கள், குழாய்கள் தயாரிப்பில் ஒரு புதிய திசையை அமைக்கும், இது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:சிறந்த பொறியியல் கல்லூரியை தேர்வு செய்வது எப்படி? - விளக்குகிறார் கல்வி ஆலோசகர்