சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று (செப்.21) செய்தியாளர்களை சந்தித்து பேசிய பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர், பார்வையற்றோரின் பணி வாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை வாழ்வாதாரம் சார்ந்த 20 அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றித் தர வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
தேர்ச்சி பெற்றும் பணியின்றி அவதி: அப்போது பேசிய அதன் பொதுச்செயலாளர் பாலு, '42 ஆண்டுகளாக பார்வையற்றோரின் கல்வி பணி வாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறோம்.
பல்லாயிரக்கணக்கான பார்வையற்றோர் எம்.ஏ., எம்.இடி., எம்.பில், பல பட்டங்கள் முடித்தும், கணினி உள்ளிட்ட தொழில்நுட்ப பயிற்சிகள் பெற்று இருந்தும் ஆசிரியர் தகுதி தேர்வு TET, உதவி பேராசிரியர் தகுதி தேர்வு போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தோம் பணி வாய்ப்பு இல்லாமல், வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாழ்ந்து வருகிறோம்.
முதலமைச்சரை நம்பி இருக்கிறோம்: மேலும், இதுகுறித்து கடந்த 2013 ஆம் ஆண்டு போராட்டம் நடைபெற்றது. தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின், அன்றைய தினம் எங்களுக்கு ஆதரவு தெரிவித்தார். தற்போது எங்களுடைய இருபது அம்ச கோரிக்கை முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றுவார் என நம்புகிறோம்.
மேலும், உயிர்கல்வியில் பயிலும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளர் உதவி தொகையை இரண்டு மடங்காக உயர்த்தி தர வேண்டும்.
வேலை இல்லாதவருக்கான உதவி தொகையை இரண்டு மடங்காக உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தர வேண்டும், இல்லையெனில் தமிழகம் முழுவதும், சாகும் வரை வீதியில் இறங்கி உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும்' என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாதாந்திர உதவித் தொகையை உயர்த்துக.. தேசிய பார்வையற்றோர் அமைப்பினர் கோவை ஆட்சியர் அலுவலத்தில் மனு