சென்னை: தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்த வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் தெரிவித்ததாவது: 'கடந்த 10 ஆண்டுகளாக வணிகர்கள் நல வாரியத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் மட்டுமே உறுப்பினராக உள்ளனர்.
அந்த விதியை திருத்தி சமானிய வணிகர்களும் உறுப்பினர் ஆகலாம் எனும் விதியை கொண்டுவந்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தோம்.
உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை தேவை
சேலத்தில் காவல் துறையால் தாக்கப்பட்டு உயிரிழந்த வணிகருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கிய நிலையில், அதை 50 லட்சமாக வழங்க கோரிக்கை வைத்தோம்.
உதவி ஆய்வாளர் பெரியசாமி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொற்று பாதிப்பு தற்போது குறைந்துவரும் நிலையில் கட்டுப்பாடுகள் அமலில் உள்ள 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளை அறிவிக்க வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
நாளை இது தொடர்பாக ஆலோசனை நடத்தி நல்ல முடிவை அறிவிப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்'
இவ்வாறு வணிக சங்க பேரமைப்பின் தலைவர் தெரிவித்தார்.