இது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் செ.பீட்டர் அந்தோணிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை தலைமைச் செயலகத்தில், கரோனா காலங்களில் பணியாளர்களுக்கு போதிய இடவசதி இல்லாததாலும், உரிய சமூக இடைவெளியைப் பின்பற்ற முடியாததாலும் அரசுப் பணியாளர்கள் கோவிட் 19 (covid-19) தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
எனவே பணியாளர் நலனைப் பேணும் பொருட்டும் அரசு அலுவலகங்களில் சமூக இடைவெளியை உறுதி செய்யும் பொருட்டும், ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த சனிக்கிழமை விடுமுறை என்பதை மீண்டும் உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தலைமைச் செயலக பணியாளர்களின் பல்வேறு அத்தியாவசிய கோரிக்கைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க செயற்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு
1. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை (CPS) கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே தொடரவும், மாதாந்திர ஓய்வூதியம், DCRG உள்ளிட்ட அனைத்து பலன்களையும் மீண்டும் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தமிழ்நாடு அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
2. தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் உதவி பிரிவு அலுவலர்களுக்கு, மத்திய அரசு தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர்களுக்கு இணையாக ( On par with Central Secretariat ) ஊதியம் நிர்ணயம் செய்ததுபோல், அடிப்படை ஊதியம் 44 ஆயிரத்து 900 ரூபாய் என நிர்ணயம் செய்யவும், சார்பு செயலர் மற்றும் துணைச் செயலர் பதவிகளில் உள்ள ஊதிய நிர்ணய முரண்பாடுகளை விரைந்து களையவும் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
3. ஏழாவது ஊதியக் குழுவினை அமல்படுத்துவதில் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 21 மாத கால நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்க தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
4 .அரசுப் பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் வீடு கட்டும் முன் பணத்தை 25 லட்சம் ரூபாயிலிருந்து 40 லட்சம் ரூபாயாக உயர்த்திட நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு கரோனா தொற்று!