சென்னை: கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் என புகழாரம் சூட்டப்படுபவர் திரு. கி. ராஜநாராயணன். இவரின் நினைவாக தூத்துக்குடி மாவட்டம் இடைச்செவல் ஊராட்சியில், அவர் பயின்ற பள்ளிக்கட்டடம் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டிருந்தது. இப்பள்ளிக்கட்டடத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் இன்று (அக்.11) திறந்து வைத்தார்.
கி. ராஜநாராயணன் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இடைசெவல் கிராமத்தில், ஸ்ரீ கிருஷ்ண இராமானுஜம் மற்றும் லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது மகனாக பிறந்தார். பேச்சுத் தமிழில் மண்மணம் மிக்க கதைகளைப் படைத்தளித்தவர். அவரது படைப்புகளில் இடம்பெற்ற கரிசல் நிலவியலும், வெள்ளந்தித் தனமும், பேரன்புமிக்க மக்களின் வாழ்க்கை முறையும் தனித்துவம் மிக்கவை.
1958 முதல் 2021 வரை இலக்கிய பணி செய்த திரு. கி.ரா. அவர்களுக்கு, 1991-ம் ஆண்டு “கோபல்லபுரத்து மக்கள்” என்ற நாவலுக்காக “சாகித்திய அகாடமி விருது” வழங்கப்பட்டது. 2016-17ஆம் ஆண்டில் மனோன்மணியம் சுந்தரனார் விருதும் வழங்கப்பட்டது. தமிழ் எழுத்துலகில் தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்ட திரு. கி.ரா, 2021 ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் நாள், தனது 99ஆம் வயதில் புதுச்சேரியில் இயற்கை எய்தினார்.
வட்டார பேச்சுவழக்கிற்கு தமிழ் இலக்கிய உலகில் உயரிய இடத்தைப் பெற்றுத்தந்த கி.ரா, கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். இந்நிலையில், கி.ரா. அவர்களின் புகழுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக, அவர் பயின்ற இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியானது பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்” என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
அதன்படி, 1946 ஆம் ஆண்டு கட்டப்பட்டு பல்வேறு கால சூழ்நிலைகளால் பொலிவிழந்த நிலையில் இருந்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கட்டடம், 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், வெள்ளை சுண்ணாம்பு, ஆற்று மணல், கருப்பட்டி, கடுக்காய், முட்டை கலவை போன்றவற்றின் மூலம் சுவர் பூச்சு செய்யப்பட்டது.
பழமை மாறாமல் மெருகேற்றப்பட்டு, புதிய ஓடுகள், தேக்கு ஜன்னல்கள், பனங்கை சட்டங்கள் பொருத்தப்பட்டு, பழைய பள்ளிக் கட்டடம் புதுப்பிக்கப்பட்டது. தன் வாழ்நாளை மண்சார்ந்த காவியங்களுக்கு உரிதாக்கி எளிமையாக வாழ்ந்த கி.ரா. அவர்கள் பயின்ற பள்ளி, மண்ணின் வாசனை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளதால், அவரது நினைவுகள் அனைத்து தரப்பினரும் போற்றத்தக்கதாக அமையும்.
இக்கட்டிட திறப்பு நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் பெ. அமுதா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: அதிமுக சார்ந்த முடிவுகளை தன்னிடம் கலந்தாலோசிக்க வேண்டும்; சபாநாயகருக்கு ஓபிஎஸ் மீண்டும் கடிதம்