சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று(பிப்.22) நடைபெறுகிறது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையரும் தேர்தல் நடத்தும் அலுவலரான ககன்தீப்சிங் பேடி ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, "தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்க உள்ளதாக தெரிவித்தார்.
வாக்கு எண்ணிக்கைக்கு வரும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களை 7 மணிக்குள்ளாக வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்துவிட வேண்டுமென்றும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்றும் கூறினார்.
சென்னை மாநகராட்சியில் இன்று 24000 காவல் துறையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். 11 மண்டலத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் 6000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் அவர் கூறினார்.
வாக்கு எண்ணிக்கை முடிவு
ஒவ்வொரு வார்டுக்கும் 10 முதல் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு மேஜையிலும் தனித்தனியாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
மேலும் வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்படும் என்றும் 8:30-லிருந்து பொதுவான வாக்குகள் எண்ணப்படும் என்றும் கூறினார்.
மேலும் ஒவ்வொரு வார்டிலும் 3 micro observers இருப்பார்கள் என்றும்,இ வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் கூறினார்.
தேர்தல் முடிவுகள் எந்தவித தடையுமின்றி தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படும் என்றும், சென்னை மாநகராட்சியில் இன்று மதியத்திற்குள் வாக்கு எண்ணிக்கை முடிந்துவிடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
வாக்கு எண்ணிக்கையின் போது ஈவிஎம் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டால் சரி செய்ய ஒவ்வொரு வார்டிலும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தயார் நிலையில் இருப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மதுரை புதுமண்டபத்தில் உள்ள 300 கடைகள் அகற்றம்