இதுதொடர்பாக நாகை மாவட்டம் தரங்கம்பாடியைச் சேர்ந்த சங்கமித்ரன் தாக்கல் செய்துள்ள மனுவில், "பொங்கல் விழாவின்போது காளைகள், குதிரைகளை வைத்து ரேக்ளா போட்டி நடத்தப்படுகிறது. போட்டிகளில் கலந்த கொண்டு தோல்வியைத் தழுவும் விலங்குகள் அதன் உரிமையாளரால் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் நடைபெறுகிறது.
அரசியல் கட்சியினர் சுய விளம்பரத்திற்காக நடத்தப்படும் இப்போட்டியில் லட்சக்கணக்கில் சூதாட்டம் நடைபெறுகிறது. போட்டி நடைபெறும் திருக்கடையூர் தேசிய நெடுஞ்சாலையில் நாள் முழுவதும் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதால், மருத்துவமனை செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இரண்டு சமுதாயத்தினரிடம் ஏற்பட்ட மோதல் காரணமாக, ரேக்ளா போட்டியை நடத்த மயிலாடுதுறை துணை ஆட்சியர் அப்போது தடை விதித்தார். அதனால், புதிய விதிகளை கொண்டு வந்த பின்னர் போட்டிகளை நடத்தவும், அதுவரை போட்டியில் கலந்து கொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், புதிய விதியை வகுப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளது எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, புதிய விதியை கொண்டு வருவது குறித்த அறிக்கையை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களை கைது செய்ய காவல்துறைக்கு ஆணை!