கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பம் பகுதியில், திமுக எம்.பி. ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த மேல்மாம்பட்டை சேர்ந்த தொழிலாளர் கோவிந்தராசு கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக திமுக எம்.பி ரமேஷ், உள்ளிட்டோருக்கு எதிராக கொலை வழக்காக பதிவுச்செய்து சிபிசிஐடி காவலர்கள் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், சிபிசிஐடி முறையாக விசாரிக்காததால், வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, சிபிசிஐடி தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, சிபிசிஐடி விசாரணை முறையாக நடைபெறுவதாகவும், புதிய விசாரணை அலுவலராக விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி ஆய்வாளர் சுந்தரராஜன் நியமிக்கப்பட உள்ளதாகவும், சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும் வாதிட்டார்.
இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி நிர்மல்குமார், முந்திரி நிறுவன தொழிலாளி கோவிந்தராசு கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி புதிய விசாரணை அலுவலர் விசாரணையை தொடரலாம் எனவும், அதை விழுப்புரம் கூடுதல் எஸ்.பி. காணிக்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
இதையும் படிங்க: முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு - கடலூர் எம்பி ரமேஷுக்கு ஜாமீன்