சென்னை: கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கு இடையே கலவரத்தின் போது அதிமுக அலுவலகத்திலிருந்து திருடப்பட்ட 113 ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த கலவர வழக்கில் 19 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணையானது பின்னர் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
குறிப்பாக அதிமுக எம்.பி சிவி சண்முகம், ’ஓபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து கதவை உடைத்து ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர் போன்ற மின்னணு பொருட்களை திருடி சென்றதாக’ புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் ஓபிஎஸ் உட்பட 60 பேர மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
என்னென்ன ஆவணங்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திருடி சென்றார்கள்? திருடப்பட்ட ஆவணங்கள் தற்போது எங்கு உள்ளது? என சிபிசிஐடி டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான காவல்துறையினர் இரண்டு முறை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்று நேரடி விசாரணை மேற்கொண்டனர்.
காவல்துறையினரின் விசாரணையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து திருடப்பட்ட ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து 113 ஆவணங்களை சிபிசிஐடி காவ்லதுறையினர் மீட்டு உள்ளனர்.
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக பத்திரம், எம்.ஜி.ஆர் மனைவி ஜானகி எழுதி கொடுத்த ஆவணம், அண்ணா டிரஸ்டின் ஆவணம், பாண்டிச்சேரி, திருச்சி மற்றும் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கட்சியின் சொத்து பத்திரம், தலைமை அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் என மொத்தமாக 113 ஆவணங்கள் மற்றும் சொத்துக்களை காவ்லதுறையினர் மீட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக 15 பேர் கைது