சென்னை: ஈ.சி.ஆர் முட்டுக்காடு பகுதியில் அமைந்துள்ள தக்ஷிண் சித்ரா அருங்காட்சியகத்தில் பழங்கால சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் வீணாதரர் மற்றும் ரிஷப்தார் ஆகிய பழங்கால இரு வெண்கல சிலைகள் தக்ஷிண் சித்ரா அருங்காட்சியகத்தில் இருந்து சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் கண்டெடுத்தனர். அச்சிலைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில், சிலைகள் குறித்து தக்ஷிண் சித்ரா மேலாளர் அசோக் குமாரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தஞ்சாவூரைச்சேர்ந்த ஸ்தபதி மாசிலாமணி என்பவர் 2012ஆம் ஆண்டு நன்கொடையாக சிலைகளை தக்ஷிண் சித்ரா அருங்காட்சியத்திற்கு வழங்கியது காவல் துறையினருக்குத் தெரியவந்தது. மேலும், மாசிலாமணியைத் தொடர்புகொண்டு காவல்துறையினர் நடத்திய விசாரணையில், முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில் சிலைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட வீணாதரர், ரிஷப்தார் ஆகிய இரு சிலைகளும் சோழர்காலத்தைச்சேர்ந்தது என ஆய்வில் தெரியவந்துள்ளதாக சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
திருட்டு சிலைகளை நன்கொடையாக கொடுத்ததாக தக்ஷிண் சித்ரா மேலாளர் அசோக்குமார் அளித்தப்புகாரின் அடிப்படையில் தஞ்சாவூரைச் சேர்ந்த ஸ்தபதி மாசிலாமணி மீது சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஏற்கெனவே ஸ்தபதி மாசிலாமணிக்குச்சொந்தமான இடங்களில் 15க்கும் மேற்பட்ட பழங்கால சிலைகளை, சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மீட்கப்பட்ட இரு சிலைகளை தொல்லியல் துறைக்கு அனுப்பி, அதன் தொன்மை குறித்து கண்டறியவுள்ளதாகவும், இவை இரண்டு சிலைகளும் எந்த கோயில்களைச்சேர்ந்தது என விசாரணை நடத்தி வருவதாகவும் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: எஸ்எஸ்சி தேர்வில் இந்தியில் வினாத்தாள் - மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்பி கடிதம்