சென்னை பெருநகர காவல்துறையின் காவல் கரங்கள் சார்பில், மூன்று தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மீட்கப்பட்ட 127 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ராஜஸ்தானில் உள்ள அப்னா கர் தொண்டு நிறுவனத்திற்கு நேற்று (ஜூலை 25) ரயில் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வு சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அவர்களை வழிஅனுப்பி வைத்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கர் ஜிவால், “மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றிதிருந்த ஒடிசா, பிகார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 127 பேர் காவல் கரங்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்களை ராஜஸ்தானில் உள்ள அப்னா கர் என்னும் தொண்டு நிறுவனத்திற்கு ரயில் மூலம் அனுப்பி வைத்துள்ளோம். அங்கிருந்து அவர்களை, தங்களது வீடுகளுக்கு அனுப்பிவைக்க முயற்சிகள் எடுக்கப்படும்“ எனத் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து பேசிய அவர், “சென்னையில் வழிப்பறி நடக்கும் முக்கிய இடங்களை கண்டறிந்து, அங்கு காவலர்களை மாற்று உடையில் அனுப்பி காண்காணிக்க திட்டமிட்டுள்ளோம்.
சிசிடிவிகள் மூலம் 90 விழுக்காடு குற்றங்களை கண்டறிய முடிகிறது. எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையில் பதிவாகியுள்ள 16 வழக்குகளில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.