கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சியின் 9வது வார்டு உறுப்பினர் கே.கணேசன் மற்றும் 15வது வார்டு உறுப்பினர் வி.யு.மருதாச்சலம் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுக்களில், பேரூராட்சியில் அதிமுகவை சேர்ந்த 8 பேர், திமுகவை சேர்ந்த 6 பேர் வார்டு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாகவும், தலைவர் பதவிக்கு மருதாச்சலமும், துணை தலைவர் பதவிக்கு கணேசனும் போட்டியிட இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
அதிமுக-வை சேரந்த 8 உறுப்பினர்களுக்கு எதிராக பதிவான வழக்குகளில், தங்களை கைது செய்யக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, மார்ச் 4ம் தேதி மறைமுக தேர்தலில் கலந்துகொள்ள சென்றபோது, திமுகவினரால் தடுத்து நிறுத்தப்பட்டு தாக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
அதன்பின், சட்டம் - ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி மறைமுக தேர்தலை தள்ளிவைத்து தேர்தல் அலுவலர் உத்தரவிட்டதாகவும், தங்களுக்கு எதிராக போத்தனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அன்றைய தினமே துணைத் தலைவருக்கான தேர்தல் மட்டும் நடத்தபட்டதாகவும், அதில் பெரும்பான்மை கிடைக்கவில்லை என தெரிந்த திமுகவினர் வாக்குப்பெட்டியை தூக்கிவீசியதாகவும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளனர்.
பண பலம் மற்றும் ஆள் பலம் காரணமாக ஆளும்கட்சியினர் முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் வெள்ளலூர் பேரூராட்சிக்கான தலைவர், துணை தலைவர் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர். மாவட்ட வருவாய் அதிகாரி அந்தஸ்திலான தேர்தல் அலுவலரை நியமித்து, மறைமுக தேர்தலை நடத்த வேண்டுமெனவும், தேர்தல் நடைமுறைகள் முழுவதையும் வீடியோ பதிவு செய்ய உத்தரவிடவும், தேவையான காவல்துறை பாதுகாப்பை வழங்க உத்தரவிடவும் மனுக்களில் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தள்ளிவைக்கப்பட்ட 63 உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுக தேர்தல் மார்ச் 26ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தேர்தல் நடைமுறைகள் வீடியோ பதிவு செய்யப்படும் எனவும், தேர்தலை கண்காணிக்க சுதந்திரமான தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், போதுமான போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை - ரூ. 35 லட்சம் பறிமுதல்