சென்னை: சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கை விவாதம் முடிந்த பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், "எதிர்க்கட்சித் தலைவர் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுவதாக சொன்னார். இதற்கு எதிராக தரக்குறைவாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
அவர் போலி விவசாயி என சொல்லியிருக்கின்றனர். எதனடிப்படையில் அப்படி சொன்னார்கள் எனத் தெரியவில்லை. பரம்பரை பரம்பரையாக விவசாயத்தில் ஈடுபட்டு வருபவர் எதிர்க்கட்சித் தலைவர்.
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு ஒன்றிய அரசு நிதி வழங்கினாலும் வழங்காவிட்டாலும், அம்மாவின் அரசு நெல்லுக்கான தொகையை வழங்கி வந்தது. திமுக அரசு, ஒன்றிய அரசு நிதி வழங்கவில்லை என விவசாயிகளுக்கு நிதி வழங்காமல் உள்ளது' எனக் குற்றம்சாட்டினார்.
யானைப் பசிக்கு சோளப்பொறி
மேலும் அவர் 'தற்போதைய முதலமைச்சர் சென்னையில் பிறந்ததால் விவசாயம் குறித்து அவருக்குத் தெரியவில்லை. நமக்கு நாமே திட்டத்தின் மூலம் மற்ற பகுதிகளுக்குச் செல்லும்போது தான் விவசாயத்தைப் பற்றி தெரிந்து கொண்டார்.
அதனால்தான் விவசாய மக்கள் எதிர்க்கட்சித் தலைவருக்கு கொடுத்த பெயர்களை எல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாமல் உப்பு சப்பில்லாமல், யானைப் பசிக்கு சோளப்பொறி போல வேளாண் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
பேரிடர் காலங்களில் மக்களை காத்ததற்குப் பிரதமரே முன்னாள் முதலமைச்சரை பாராட்டியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரை போலி விவசாயி என வேளாண்துறை அமைச்சர் கூறியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அரசியல் நாகரிகத்தோடு பதிலளிக்க வேண்டும். இல்லையெனில் நாங்களும் அந்த நிலைக்குச் செல்வோம்’ எனக்குறிப்பிட்டார்.
தங்கமில்லாமல் திருமணம் நடைபெறக்கூடாது
மேலும் அவர், ‘தங்கமில்லாமல் திருமணம் நடைபெறக்கூடாது என்று தான், அம்மா தாலிக்குத் தங்கம் திட்டத்தை இந்தியாவிற்கு எடுத்துக்காட்டாக கொண்டு வந்தார். அவர் கொண்டு வந்த ஒரே காரணத்தினால் தான் இதனை நிறுத்தி உள்ளனர். அவர்களின் நிர்வாக குளறுபடி குறித்து விளக்கமளித்தனர். அது ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. கரோனா காலத்தில் இந்தத் திட்டம் தொடரமுடியாமல் போனதால் 3 லட்சம் விண்ணப்பதாரர்கள் நிலுவையில் உள்ளனர்.
இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாமல் இருப்பது அரசின் இயலாமை தானே தவிர, திட்டத்தின் இயலாமை அல்ல’ என முடித்தார் ஆர்.பி.உதயகுமார்.
பிறகு பேசிய அதிமுக சட்டபேரவை உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி, ”தாலிக்குத் தங்கம் திட்டம் அம்மா கொண்டு வந்த அற்புதமான திட்டம். முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் நடந்த ரெய்டில் எதுவும் கிடைக்கவில்லை.
இரண்டு முறை ரெய்டு நடத்தியும் எதுவும் கிடைக்கவில்லை. எதிர்க்கட்சியை முடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர். மக்களுக்காக எதையும் தாங்கிக் கொண்டு நாங்கள் போராடுவோம்'' என்று கூறினார்.
கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை எதிர்த்து தீர்மானம்
தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன், 'உயர்கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டு உதவித் தொகை வழங்குவதாக கூறியுள்ளனர். 2019-20ஆம் கல்வியாண்டின்படி மாணவிகள் 51 விழுக்காடு பேர் உயர்கல்வி பயில்கின்றனர். மாணவர்களுக்கு இணையாக மாணவிகள் உயர்கல்வி பயில்கின்றனர்’ எனக்குறிப்பிட்டார்.
இதேபோல் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியதை ஆதரித்தும், சட்டப்பேரவையில் பேசியதை விளக்கியும் பாமக தலைவர் ஜி.கே.மணி, இந்திய கம்யூனிஸ்ட்யின் சட்டப்பேரவை உறுப்பினர் தளி ராமச்சந்திரன், விசிகவின் சிந்தனைச்செல்வன், மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.
இதையும் படிங்க: பெண்களுக்கு கல்வி தான் முக்கியம்; திருமணம் அல்ல - முதலமைச்சர் ஸ்டாலின்