சென்னை: குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
சென்னை வியாசர்பாடி ரத்தினம் தெருவைச் சேர்ந்த 50 வயது முதியவர் ரவி, 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, ரவி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, குழந்தையை கடத்தி சென்ற குற்றச்சாட்டுக்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
அதிவேகமாக வந்த கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு: வைரலாகும் சிசிடிவி காட்சிகள்
அதேபோன்று, 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் கீழ் 20 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்த நீதிபதி, இரு குற்றச்சாட்டுக்கான தண்டனையையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நிவாரணமாக 5 லட்சம் ரூபாயை வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார்.