ராமநாதபுரம் மாவட்ட நகர்ப்புற பாஜக தலைவர் வீரபாகு உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "நான் ராமநாதபுரம் நகர்ப்புற பாஜக தலைவராக உள்ளேன். நான் 2018ஆம் ஆண்டில் ஆட்டோ ஓட்டும் பணி செய்து வந்தேன். அந்த வகையில் 29.3.2018 அன்று இரவு பயணி ஒருவரை ஆட்டோவில் ஏற்றிச்சென்றேன்.
அந்த நேரத்தில் நான்கு பேர் கொண்ட கும்பல் ஆட்டோவை வழி மறித்து என்னை கொலை செய்யும் நோக்கில் பயங்கர ஆயுதங்களால் தாக்கியது. அவர்களிடமிருந்து ஓட்டம்பிடித்து அரசு பேருந்தில் ஏறி அரசு மருத்துவமனையில் சேர்ந்தேன். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தேன்.
எனது இரண்டு கைகளிலும் நரம்புகள், ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில் உயிர் பிழைத்தேன். இன்றளவும் சிகிச்சையில் இருந்துவருகிறேன். எந்த வேலையும் செய்ய முடியவில்லை. வருமானம் இன்றி எனது குடும்பம் தவிக்கிறது. மறுபுறம் என் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீதான விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
எனவே இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி, விரைவாக விசாரிக்கும்படி உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு நேற்று (மார்ச் 29) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பள்ளிவாசல் மயான வேலைகளை செய்ய எதிர்ப்பு - போலீஸ் பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு