சென்னையில் நேற்று (அக். 21) மாலையில் பெய்த மழையில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் மழைநீர் வடிகாலில் தண்ணீர் செல்லாமல் தேங்கி நின்றன. உடனடியாகத் தண்ணீர் வெளியேற முடியாமல் தாழ்வான கட்டடங்கள் உள்ள பகுதிகளில் உள்ளே புகுந்தன.
இந்நிலையில், எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனை அமைந்துள்ள சாலையில் இரண்டு அடிகளுக்கு மேல் தண்ணீர் தேக்கத்துடன் மழைநீர் வடிகாலில் சென்றது. அதனால் சாலையில் சென்ற தண்ணீர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு உள்ள வராண்டாவில் நுழைந்தது. உடனடியாக மருத்துவமனையில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு தண்ணீரை அகற்றினர்.
இதுகுறித்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக் கண்காணிப்பாளர் மருத்துவர் எழிலரசி கூறும்போது, “மருத்துவமனையில் நோயாளிகள் தங்கியுள்ள எந்த வார்டிற்கு உள்ளேயும் மழைநீர் செல்லவில்லை. வெளியில் சாலையில் தண்ணீர் தேங்கி நின்றதால் உள்ளே வந்த தண்ணீரையும் உடனடியாக மருத்துவமனை ஊழியர்களைக் கொண்டு அகற்றிவிட்டதால் எங்கும் தண்ணீர் தேங்க வில்லை” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ”நாடே வியக்கும் அளவிற்கு ஒரு அறிவிப்பு வரும்” - அமைச்சர் செங்கோட்டையன்