தொடர்வண்டித்துறையில் இயக்கப்படும் தொடர்வண்டிகளில் முதல் கட்டமாக 109 தொடர்வண்டிகளை, தனியார் மூலம் இயக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய அரசின் இத்திட்டத்தால், தொடர்வண்டி ஊழியர்கள் மட்டுமின்றி பொதுமக்களுக்கும் கடும் பாதிப்புகள் ஏற்படும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (ஆக.10) திருவொற்றியூர் எஸ்.ஆர்.ஏ தொழிற்சங்கத்தின் சார்பில், தொடர்வண்டிகளை தனியாருக்கு கொடுக்க முயலும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தனிமனித இடைவெளியுடன் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது மத்திய அரசிற்கு எதிராக கண்டன முழக்கங்களும் எழுப்பப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொழிற்சங்க இணை பொதுச்செயலாளர் கோபாலகிருஷ்ணன், ”தொடர்வண்டிகளை தனியாருக்கு வழங்கும் மத்திய அரசின் திட்டத்தால், ஊழியர்கள் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கும் பயணக் கட்டண உயர்வு, சலுகை பறிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் தனியார் நிறுவனங்கள் ஈடுபடும் அபாயம் உள்ளது.
எனவே, பொதுமக்களும் மத்திய அரசின் தொடர்வண்டித்துறையை தனியாருக்கு தாரைவார்க்கும் இத்திட்டத்தை எதிர்க்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: இ-பாஸ் நடைமுறை மனித உரிமை மீறிய செயலா? - அரசு பதிலளிக்க உத்தரவு