தென்காசி வெகுநாட்களாக பட்டியலின மக்கள் போட்டியிடும் வகையிலான தனித் தொகுதியாக இருப்பதால், அதை பொது தொகுதியாக மாற்றக்கோரி, உயர் நீதிமன்றக்கிளையில் வழக்குத்தொடரப்பட்டது.
இதை ஓய்வு பெறுவதற்கு முன்பு நீதிபதி என்.கிருபாகரன் மற்றும் நீதிபதி புகழேந்தி ஆகியோர் இணைந்த அமர்வு விசாரித்தது.
அப்போது அவர்கள் பிறப்பித்த உத்தரவில், 'தென்காசி தனித்தொகுதியில் பட்டியலின, பழங்குடியினத்தவர்களின் மக்கள்தொகை பிற சமுதாயத்தினரை விட கூடுதலாக இருப்பதன் அடிப்படையிலேயே, அது தனிததொகுதியாக தேர்தல் ஆணையத்தால் மறுவரையறை செய்யப்பட்டுள்ளது.
எனவே, இது தொடர்பான மனுதாரரின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. இருந்தாலும், இந்த வழக்கின் மூலம் இந்த நீதிமன்றம் முக்கியமான விஷயத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 1962இல் மக்களவைக்கு 41 உறுப்பினர்கள் இருந்தனர். தமிழ்நாடுவும், ஆந்திராவும் மக்கள்தொகையை சிறப்பாக கட்டுப்படுத்தியன் விளைவாக, தமிழ்நாட்டில் 41ஆக இருந்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 39 ஆகவும், ஆந்திர மாநிலத்தில் 42ஆக இருந்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 40ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால், அரசியல் அதிகாரம் வெகுவாக பறிபோய் இருக்கிறது.
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த தவறிய உத்தர பிரதேசம், பிஹார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் எம்.பி.க்கள் எண்ணிக்கை அதிகம். அதேநேரம், மக்கள்தொகையை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதால் தமிழ்நாட்டில் 1967 முதல் 2019ஆம் ஆண்டு வரை நடந்த 14 மக்களவைத் தேர்தல்களில் தலா 2 எம்.பி.க்கள் என மொத்தம் 28 எம்.பி.க்கள் மூலம் கிடைத்திருக்க வேண்டிய உரிமை, பலன்களை தமிழ்நாடு இழந்துள்ளது.
வாக்கு அரசியலால் நிகழ்ந்த மாற்றம்
கடந்த 1999ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு , ஒரு வாக்கு கிடைக்காமல் கவிழ்ந்ததை யாரும் மறக்க முடியாது.
ஒரு வாக்கு என்பது ஒரு ஆட்சியையே கவிழ்க்கும். ஆனால், தமிழ்நாட்டுக்கான 2 எம்.பி.க்களை குறைத்தது குறித்து இதுவரை ஏன் என்று எந்த அரசியல் கட்சியும் கேள்வி எழுப்பவில்லை.
மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதன் மூலமாக தொகுதி மறுவரையறை என்ற பெயரில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கும்போது, அது மாநிலங்களின் உரிமைகளை எளிதில் பறிக்கும் என்பதே நிதர்சனம்.
ஒரு மக்களவை உறுப்பினர் மூலம் மாநிலத்துக்கு வளர்ச்சிக்கு, 5 ஆண்டுகளில் 200 கோடி ரூபாய் சராசரியாக கிடைக்கும் கணக்கிட்டால், கடந்த 1967ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை, இதுவரை நடைபெற்றிருக்கும் 14 தேர்தல்களில் 28 மக்களவை உறுப்பினர்களை மொத்தமாக இழந்து, தமிழ்நாடு சந்தித்த இழப்பிற்காக மத்திய அரசு ஏன் 5600 கோடி ரூபாயை இழப்பீடாக வழங்கக் கூடாது.
வர இருக்கும் தேர்தல்களில் மக்கள்தொகையை அடிப்படையாக வைத்து தமிழ்நாடு எம்.பி.க்கள் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது.
அதேபோல், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்ததற்குப் பதிலாக ஏன் மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஏன் உயர்த்தக்கூடாது என மத்திய அரசு 4 வாரங்களில் விளக்கம் அளிக்க வேண்டும்’ என சரமாரியாக கேள்விக்கணைகளை தொடுத்துள்ளது.
மேலும் இதுதொடர்பாகப் பேசிய அமர்வு நீதிபதிகள், 'திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, இந்தியகம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறோம். அவர்களும் இதுதொடர்பாக 4 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்' எனக்கூறி விசாரணையை தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: ‘சிலரது திருட்டு புத்தி காரணமாக இயற்கை வளம் பாதிக்கப்படுகிறது’ நீதிபதி கிருபாகரன்!