சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், வருகிற 23ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதாக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரும், முன்னாள் அதிமுக நிர்வாகியுமான புகழேந்தி, வழக்கறிஞர் சதீஷ், எம்ஜிஆர் மன்ற வடசென்னை மாவட்ட செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஒன்றாக வந்து மயிலாப்பூரில் உள்ள காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை இன்று கொடுத்தனர்.
இதையடுத்து ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், "அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் போது சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துவதற்காக ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ரவுடிகளை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் எங்களுக்கு வந்துள்ளது.
இதனால் பொதுக்குழு கூட்டத்தின் போது சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் ஓபிஎஸ் பொதுக்குழுவை தள்ளிவைக்கலாம் என தெரிவித்துள்ளார். மீறி பொதுக்குழு கூட்டம் நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்துவதற்காகவே இந்த கூட்டத்தை நடத்த உள்ளனர். இதனால் காவல்துறை அனுமதி வழங்கக்கூடாது.
அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் எடுக்கும் முடிவு தான் இறுதியான முடிவு. தொண்டர்கள் ரத்தம் சிந்துவதை ஓபிஎஸ் விரும்பவில்லை. சுமூகமாக சென்றுவிடலாம் என கூறிய பிறகும் ஈபிஎஸ் விட்டுக்கொடுப்பதில்லை. அதிமுக கட்சியில் பதவிக்காக வரவில்லை. ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக மட்டுமே நான் இங்கு வந்துள்ளேன்" என்று புகழேந்தி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 'எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக ஒற்றைத் தலைமையாக தேர்ந்தெடுக்கப்படுவார்' - பொள்ளாச்சி ஜெயராமன்