புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33.5 சதவீதமும், பழங்குடியினருக்கு 0.5 சதவீதமும் ஒதுக்கீடு வழங்கி 2019ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை திரும்பப் பெற்றதை எதிர்த்து அம்மாநில எதிர்க்கட்சித் தலைவரும், திமுக அமைப்புச் செயலாளருமான சிவா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனிடையே இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டி, வழக்கை திரும்பப் பெற்றார்.
அதோடு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதுதொடர்பான விசாரணையில் உச்ச நீதிமன்றம் வழக்கு தொடரும் வரை தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்திவைக்க உத்தரவிட்டது. அத்துடன் உயர் நீதிமன்றத்தில் வழக்கை தொடரவும் உத்தரவிட்டது. அந்த வகையில் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்துவருகிறது. இதனிடையே, உள்ளாட்சி தேர்தலை அறிவிக்க புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது என்று சிவா தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆனந்தி அடங்கிய அமர்வு, தேர்தல் தொடர்பான அறிவிப்பை 6 வாரங்களுக்கு வெளியிடக் கூடாது. தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலுக்கான தடை தொடரும் - நீதிமன்றம்