பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதைக் கண்டித்து, வங்கி ஊழியர்கள் நேற்றும் இன்றும் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருந்தன.
இது தொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கப் பொதுச்செயலாளர் வெங்கடாசலத்திடம் நாம் பேசிய போது, "நேற்றும் இன்றும் சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்கள், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பண பரிவர்த்தனைகள், 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான காசோலை பரிவர்த்தனைகள், ஏடிஎம் சேவைகள், அரசு கருவூல கணக்குகள், ஏற்றுமதி - இறக்குமதி கணக்குகள் உள்ளிட்டவை இதனால் பாதிப்பை சந்தித்துள்ளன.
வேலை நிறுத்தம் அறிவித்ததும், மத்திய அரசின் தொழில்துறை ஆணையர் சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அப்போது, வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை தற்காலிகமாக தள்ளி வைத்துவிட்டு அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்க கோரிக்கை வைத்தோம். ஆனால், அதற்கு அரசு ஒப்புக்கொள்ளவில்லை.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து மத்திய அரசு பேசி வருகிறது. அதற்கு பொதுத்துறை வங்கிகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. தனியார் மயமாக்கப்படுவதால் ஊழியர்களுக்கு பணிப்பாதுகாப்பு, புதிய வேலைவாய்ப்புகள், பணி உயர்வு, ஊதிய உயர்வு, இடஒதுக்கீடு உள்ளிட்டவை பாதிக்கப்படும். அதுமட்டுமல்லாமல், வங்கி வாடிக்கையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும்.
தனியார் வங்கிகள் லாபத்தின் அடிப்படையில் இயங்குபவை. இதனால் லாபம் குறைவாக உள்ள கிளைகள், விவசாயிகள், மாணவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குவது உள்ளிட்ட சேவைகளை வழங்காது. 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை வலுப்படுத்த வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: 100% ரயில் போக்குவரத்திற்கு உத்தரவிட முடியாது - உயர் நீதிமன்றம்